Tuesday, January 26, 2010

புல்லறிவாளரைப் போற்றாதீர்!

செல்வம் கருதிச்
சிலர்பலர் வாழ்வு எனும்
புல்லறிவாளரைப்
போற்றிப் புலராமல்,
இல்லம் கருதி
இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கு எய்த
விற்குறி ஆமே.


சிலருக்கும் பலருக்கும் செல்வ வாழ்வு தருகிறோம் என்று
சொல்லிச் செல்வோரின் அழிகின்ற செல்வத்தைக் கருதி
வாழ்த்தி வாடாதீர்!

வில்வீரன் செலுத்தும் அம்பானது இலக்கைத் தவறாது அடைவது போல,
வீடு, பேற்றை அளிக்கும் இறைவனை வணங்கி வாழ்த்தினால்,
உங்களது வறுமையைத் தவறாது நீக்கி இன்பம் தருவான்.


-அறம் செய்யான் திறம், திருமந்திரம் (269)

Thursday, January 14, 2010

நாட்டுப் பாடல் - 1

கண்டகண்ட கோவிலெல்லாம்
கையெடுத்துக் கும்பிடுவார்
காணாத கோவிலுக்குக்
காணிக்கை அனுப்பிவைத்தார்
இலையிலே சாதமுண்டால்
என்னதவம் என்றுசொல்லித்
தரையை அவர் மெழுகிச்
சாதங்கள் உண்டார்கள்

பாலடைக்குப் பால்கொடுப்பார்
பசித்தார் முகம்பார்ப்பார்
தவித்து வந்த பேர்களுக்குத்
தண்ணீர் கொடுப்பார்கள்
சாலைகள் போட்டு வைத்தார்
சத்திரங்கள் கட்டிவைத்தார்
என்ன தவம் பண்ணினாலும்
எதனாலும் பிள்ளை இல்லை!

-நாட்டுப் பாடல்