Showing posts with label திருமந்திரம். Show all posts
Showing posts with label திருமந்திரம். Show all posts

Tuesday, January 26, 2010

புல்லறிவாளரைப் போற்றாதீர்!

செல்வம் கருதிச்
சிலர்பலர் வாழ்வு எனும்
புல்லறிவாளரைப்
போற்றிப் புலராமல்,
இல்லம் கருதி
இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கு எய்த
விற்குறி ஆமே.


சிலருக்கும் பலருக்கும் செல்வ வாழ்வு தருகிறோம் என்று
சொல்லிச் செல்வோரின் அழிகின்ற செல்வத்தைக் கருதி
வாழ்த்தி வாடாதீர்!

வில்வீரன் செலுத்தும் அம்பானது இலக்கைத் தவறாது அடைவது போல,
வீடு, பேற்றை அளிக்கும் இறைவனை வணங்கி வாழ்த்தினால்,
உங்களது வறுமையைத் தவறாது நீக்கி இன்பம் தருவான்.


-அறம் செய்யான் திறம், திருமந்திரம் (269)

Monday, December 21, 2009

வராத இளமை!

கிழக்கு எழுந்து
ஓடிய ஞாயிறு
மேற்கே விழக் கண்டும்
தேறார் விழிஇலா மாந்தர்
குழக்கன்று
மூத்துஎரு தாய்ச்
சில நாளில் விழக்கண்டும்
தேறார் வியன்உல கோரே.

-இளமை நிலையாமை, திருமந்திரம்(177)


கிழக்குத் திசையில் வானத்தில் தோன்றி விளங்கும் கதிரவன்
மேற்கில் மறைவதைக் கண்டும்,
அறிவில்லாதவர்கள் 'நிலையாமை' தன்மையை உணரமாட்டார்கள்.

இதைப்போல,
இளங்கன்று சில நாட்களில் வளர்ந்து,
மூப்பெய்தி இறப்பதைக் கண்டும்
அகன்ற இவ்வுலகத்தவர்கள்
'இளமை நிலையாமை'யை உணரமாட்டார்கள்.

Friday, December 11, 2009

இயமன் வருவது உறுதி!

தன்னை அறியாது,
தாம் நல்லார் என்னாது,
இங்கு இன்மை அறியாது,
இளையர் என்று ஓராது,
வன்மையில் வந்திடும் கூற்றம்
வருமுன்னம் தன்மையின்
நல்ல தவம்செய்யும்
நீரே.

-திருமந்திரம் (255)


உன் நிலையை அறிந்துகொள்ளாமல்,
நீ நல்லவன் என்று எண்ணாமல்,
உனக்கு வறுமை இங்கு உண்டானது என்று நினைக்காமல்,
இளையவன் என்று கருதாமல்,
வலிமையுடைய கூற்றுவன் (இயமன்) உன் உயிரைக் கொண்டு போவான்!
ஆதலால், நீ காலன் வருவதற்கு முன்
உடலை நிலைக்கச் செய்யும் நல்ல தவத்தைச் செய்!


இன்மை - வறுமை
ஓராது - உணராது

Saturday, December 5, 2009

செல்வப்பயனை அறியாதவர்!

எட்டி பழுத்த,
இருங்கனி வீழ்ந்தன,
ஒட்டிய நல்லறம்
செய்யாதவர் செல்வம்;
வட்டிகொண்டு ஈட்டியே
மண்ணில் முகந்திடும்
பட்டிப் பதகர்
பயன்அறி யாரே.

-திருமந்திரம்(260)


தங்களுக்குப் பொருத்தமான நல்லறத்தைச் செய்யாதவரின் செல்வம்,
எட்டி மரத்தின் பெரிய பழம் பழுத்து, யாருக்கும் பயன்படாது விழுந்து கிடந்ததைப் போலாகும்.
உலகில், வட்டி மேல் வட்டி வாங்கி, மற்றவர்களின் பொருள்களைக் கவர்ந்து கொள்ளும்
வஞ்சமுடையவர்கள், செல்வத்தின் பயனை அறியாதவர்கள் ஆவார்கள்.

எட்டிப் பழம் அழகாயிருந்தாலும், கசப்பாயிருப்பதால் பயன்படாதது போல,
அறம் செய்யாதவனின் செல்வம் பயன்படாது!

பட்டிப் பதகர் - வஞ்சனையை உடைய பாதகர்