Tuesday, June 29, 2010

இரட்டைப் புலவர்கள் - 1

தமிழ்ப் புலவர்களில் அதிகம் பேசப்படாதவர்களுள் "இரட்டை புலவர்"களும் அடங்குவர். இதில் ஒருவருக்கு கண்பார்வை கிடையாது. மற்றொருவருக்கு கால்கள் கிடையாது. இவர்களின் வெண்பாக்களில் முதல் இரு அடிகளை முதலாமவர் சொல்ல, ஈர்ரடிகளிரண்டையும் பின்னவர் முடிப்பார்.

கால்களற்றவர் வழி சொல்ல, பார்வையற்றவர் அவரை தோள்களில் தூக்கிகொண்டு செல்வார். ஏழ்மையில் வாடிய அவ்விருவருக்கும் உடுத்த துணி ஒன்று.மாற்று துணி ஒன்று தான். அவ்விரண்டுமே கந்தல் வேறு. ஒருமுறை அவ்விருவரும் மதுரையம்பதிக்கு விஜயம் செய்தனர்.

வைகையில் துணிகளை அலசி, நீராடி விட்டு, சொக்கரையும், மீனாட்சியையும் சந்திக்க உத்தேசப்பட்டு, ஆற்றில் இறங்கினர். பார்வையற்றவர் துணிகளைத் துவைக்க, கால்களற்றவர் கரைமேல் அமர்ந்து கொண்டிருந்தார்.

வைகையின் வெள்ள மிகுதியால், துவைக்கப்பட்டு கல்லின் மேல் வைக்கப்பட்டிருந்த வேட்டியானது நீரினால் அடித்துச்செல்லப்பட்டது. நடப்பதேதும் அறியாத பார்வையற்றவர் மற்றொரு துணியை துவைத்துக்கொண்டிருக்க, நீரினால் அடித்துச்செல்லப்பட்ட வேட்டியை தண்ணீரில் இறங்கி பிடிக்க முடியாத கால்களற்றவர் :

"அப்பிலே துவைத்து அடுத்தடுத்து அதைநீர்
தப்பினால் நம்மை யது - தப்பாதோ"


என வெண்பாவின் முதல் இரு அடிகளை சொன்னார்.

[பொருள் : திரும்ப திரும்ப அந்த கந்தல் துணியை அடித்து துவைத்தால் - (பாவம்! அந்த துணி விட்டா போதுண்டாசாமி-ன்னு) நம்மை விட்டு விலகிச்சென்றுவிடாதோ!]

கல்லின் மேல் வைக்கப்பட்டிருந்த வேட்டியானது நீரினால் அடித்துச்செல்லப்பட்டது என்று பார்வையற்றவருக்கு அப்போதுதான் புரிந்தது . என்ன செய்வது? நீரில் நீந்திச்சென்று பிடிக்கமுடியாத நிலை. இப்போது வெண்பாவை எப்படி முடிக்கிறார் பாருங்கள்:

"இக்கலிங்கம் போனாலென்ன எகலிங்க மாமதுரை
சொக்கலிங்கம் உண்டே துணை".

[பொருள் : இந்த துணி (கலிங்கம் -துணி) போனா போகட்டும் நமக்கு துணையாத்தான் சொக்கர் இருக்காரே!!)

சொக்கர் மேல் என்னே! பற்றற்ற பக்தி அவ்விருவருக்கும்.

என்னே! தமிழ். என்னே! பக்தி.

அய்யன்மீர்! தமிழுடனே பக்தியும் இணையும் பொழுதல்லவோ பரவசநிலை?

Tuesday, January 26, 2010

புல்லறிவாளரைப் போற்றாதீர்!

செல்வம் கருதிச்
சிலர்பலர் வாழ்வு எனும்
புல்லறிவாளரைப்
போற்றிப் புலராமல்,
இல்லம் கருதி
இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கு எய்த
விற்குறி ஆமே.


சிலருக்கும் பலருக்கும் செல்வ வாழ்வு தருகிறோம் என்று
சொல்லிச் செல்வோரின் அழிகின்ற செல்வத்தைக் கருதி
வாழ்த்தி வாடாதீர்!

வில்வீரன் செலுத்தும் அம்பானது இலக்கைத் தவறாது அடைவது போல,
வீடு, பேற்றை அளிக்கும் இறைவனை வணங்கி வாழ்த்தினால்,
உங்களது வறுமையைத் தவறாது நீக்கி இன்பம் தருவான்.


-அறம் செய்யான் திறம், திருமந்திரம் (269)

Thursday, January 14, 2010

நாட்டுப் பாடல் - 1

கண்டகண்ட கோவிலெல்லாம்
கையெடுத்துக் கும்பிடுவார்
காணாத கோவிலுக்குக்
காணிக்கை அனுப்பிவைத்தார்
இலையிலே சாதமுண்டால்
என்னதவம் என்றுசொல்லித்
தரையை அவர் மெழுகிச்
சாதங்கள் உண்டார்கள்

பாலடைக்குப் பால்கொடுப்பார்
பசித்தார் முகம்பார்ப்பார்
தவித்து வந்த பேர்களுக்குத்
தண்ணீர் கொடுப்பார்கள்
சாலைகள் போட்டு வைத்தார்
சத்திரங்கள் கட்டிவைத்தார்
என்ன தவம் பண்ணினாலும்
எதனாலும் பிள்ளை இல்லை!

-நாட்டுப் பாடல்

Sunday, December 27, 2009

அல்லாவின் அருள்!

கல்லாதவ ராயினும்,
உண்மை சொல்லதவராயினும்,
பொல்லாதவ ராயினும்,
தவமில் லாதவ ராயினும்,
நல்லாருரை நீதியின்படி
நில்லாதவ ராயினும்,
எல்லாரும் வந்தேத்து மளவில்
யமபயங் கெடச் செய்பவன்,
அல்லா, அல்லா, அல்லா!

-மகாகவி பாரதி

Wednesday, December 23, 2009

பிறகு பார்க்கலாம்!

எத்துணை யானும்,
இயைந்த அளவினால்,
சிற்றறம் செய்தார் தலைப்படுவர்;
மற்றைப்
பெருஞ்செல்வம் எய்தியக்கால்,
'பின்னறிதும்!' என்பார்
அழித்தார்,
பழிகடலுத் துள்.

-துன்ப இயல், நாலடியார்(272)


தம்மால் இயன்ற அளவு எவ்வளவேயாயினும்,
சிறிய தருமங்களைச் செய்து வருபவர்கள்
எக்காலத்திலும் மேன்மை நிலையில் இருப்பார்கள்;

பெருஞ்செல்வம் இருந்தும் தருமம் செய்யாது,
'பிறகு பார்க்கலாம்' என்றிருப்பவர்கள்,
'உலக நிந்தனை'க் கடலிலே சிக்கி அழிந்து போவர்.

தலைப்படல் - மேன்மைப்படுதல்
பழி கடலம் - கடல் அளவான பழிச்சொற்களின் மிகுதி

Monday, December 21, 2009

வராத இளமை!

கிழக்கு எழுந்து
ஓடிய ஞாயிறு
மேற்கே விழக் கண்டும்
தேறார் விழிஇலா மாந்தர்
குழக்கன்று
மூத்துஎரு தாய்ச்
சில நாளில் விழக்கண்டும்
தேறார் வியன்உல கோரே.

-இளமை நிலையாமை, திருமந்திரம்(177)


கிழக்குத் திசையில் வானத்தில் தோன்றி விளங்கும் கதிரவன்
மேற்கில் மறைவதைக் கண்டும்,
அறிவில்லாதவர்கள் 'நிலையாமை' தன்மையை உணரமாட்டார்கள்.

இதைப்போல,
இளங்கன்று சில நாட்களில் வளர்ந்து,
மூப்பெய்தி இறப்பதைக் கண்டும்
அகன்ற இவ்வுலகத்தவர்கள்
'இளமை நிலையாமை'யை உணரமாட்டார்கள்.

Saturday, December 19, 2009

பேதை நெஞ்சே!

செல்வங்கள் கேட்டால்நீ கொடுக்க வேண்டும்,
சிறுமைகளென் னிடமிருந்தால் விடுக்க வேண்டும்,
கல்வியிலே மதியினைநீ தொடுக்க வேண்டும்,
கருணையினால் ஐயங்கள் கெடுக்க வேண்டும்,
தொல்லைதரும் அகப்பேயைத் தொலைக்க வேண்டும்,
துணையென்று நின்னருளைத் தொடரச் செய்தே
நல்லவழி சேர்ப்பித்துக் காக்க வேண்டும்,
'நமோ நமஓம் சக்தி'யென நவிலாய் நெஞ்சே!

-மகாகவி பாரதியார்