Tuesday, June 29, 2010

இரட்டைப் புலவர்கள் - 1

தமிழ்ப் புலவர்களில் அதிகம் பேசப்படாதவர்களுள் "இரட்டை புலவர்"களும் அடங்குவர். இதில் ஒருவருக்கு கண்பார்வை கிடையாது. மற்றொருவருக்கு கால்கள் கிடையாது. இவர்களின் வெண்பாக்களில் முதல் இரு அடிகளை முதலாமவர் சொல்ல, ஈர்ரடிகளிரண்டையும் பின்னவர் முடிப்பார்.

கால்களற்றவர் வழி சொல்ல, பார்வையற்றவர் அவரை தோள்களில் தூக்கிகொண்டு செல்வார். ஏழ்மையில் வாடிய அவ்விருவருக்கும் உடுத்த துணி ஒன்று.மாற்று துணி ஒன்று தான். அவ்விரண்டுமே கந்தல் வேறு. ஒருமுறை அவ்விருவரும் மதுரையம்பதிக்கு விஜயம் செய்தனர்.

வைகையில் துணிகளை அலசி, நீராடி விட்டு, சொக்கரையும், மீனாட்சியையும் சந்திக்க உத்தேசப்பட்டு, ஆற்றில் இறங்கினர். பார்வையற்றவர் துணிகளைத் துவைக்க, கால்களற்றவர் கரைமேல் அமர்ந்து கொண்டிருந்தார்.

வைகையின் வெள்ள மிகுதியால், துவைக்கப்பட்டு கல்லின் மேல் வைக்கப்பட்டிருந்த வேட்டியானது நீரினால் அடித்துச்செல்லப்பட்டது. நடப்பதேதும் அறியாத பார்வையற்றவர் மற்றொரு துணியை துவைத்துக்கொண்டிருக்க, நீரினால் அடித்துச்செல்லப்பட்ட வேட்டியை தண்ணீரில் இறங்கி பிடிக்க முடியாத கால்களற்றவர் :

"அப்பிலே துவைத்து அடுத்தடுத்து அதைநீர்
தப்பினால் நம்மை யது - தப்பாதோ"


என வெண்பாவின் முதல் இரு அடிகளை சொன்னார்.

[பொருள் : திரும்ப திரும்ப அந்த கந்தல் துணியை அடித்து துவைத்தால் - (பாவம்! அந்த துணி விட்டா போதுண்டாசாமி-ன்னு) நம்மை விட்டு விலகிச்சென்றுவிடாதோ!]

கல்லின் மேல் வைக்கப்பட்டிருந்த வேட்டியானது நீரினால் அடித்துச்செல்லப்பட்டது என்று பார்வையற்றவருக்கு அப்போதுதான் புரிந்தது . என்ன செய்வது? நீரில் நீந்திச்சென்று பிடிக்கமுடியாத நிலை. இப்போது வெண்பாவை எப்படி முடிக்கிறார் பாருங்கள்:

"இக்கலிங்கம் போனாலென்ன எகலிங்க மாமதுரை
சொக்கலிங்கம் உண்டே துணை".

[பொருள் : இந்த துணி (கலிங்கம் -துணி) போனா போகட்டும் நமக்கு துணையாத்தான் சொக்கர் இருக்காரே!!)

சொக்கர் மேல் என்னே! பற்றற்ற பக்தி அவ்விருவருக்கும்.

என்னே! தமிழ். என்னே! பக்தி.

அய்யன்மீர்! தமிழுடனே பக்தியும் இணையும் பொழுதல்லவோ பரவசநிலை?