Wednesday, July 7, 2010

மூன்று பாசுரங்கள்

வைணவத்தை சிறக்கச் செய்ததில் ஆழ்வார்களது பங்களிப்பு மகத்தானது. இவர்களுள் முதல் மூவர் :

பொய்கை ஆழ்வார் (காஞ்சி - ஐப்பசி - திருவோணம்)
பூதத்தாழ்வார் (மாமல்லை - ஐப்பசி - அவிட்டம்)
பேயாழ்வார் (மயிலை - ஐப்பசி - சதயம்)

இனி வரும் நிகழ்வுக்கு முன் மூவரும் ஒருவரை ஒருவர் சந்தித்தது இல்லை.

ஒருமுறை பொய்கை ஆழ்வார் திருக்கோவலூரை வந்தடைந்த பொழுது பெருமழை. இரவு நேரம் வேறு. உடனேஅவர் அங்கிருந்த மிருகண்டு மகரிஷி ஆசிரமத்தை அடைந்தார். கதவைத் திறந்து உள்ளே சென்று படுத்துக் கொண்டார். - அறை மிகச்சிறியது. ஒருவர் தாம் படுக்கலாம்.

சற்று நேரம் கழித்து கதவு தட்டப்படும் ஓசை கேட்டுத் திறந்தார். அங்கே பூதத்தாழ்வார் நின்றுகொண்டிருந்தார். இருவரும் உள்ளே போய் உட்கார்ந்து கொண்டனர். - படுக்க இடம் கிடையாது.

இன்னும் சிறிது நேரத்திற்குப் பின், கதவு மீண்டும் தட்டப்படும் ஓசை கேட்டுத் திறந்தால் - அங்கே பேயாழ்வார் நின்றுகொண்டிருந்தார். சரி என மூவரும் உள்ளே போய் நின்று கொண்டனர். - படுக்கவோ, உட்காரவோ இடம் கிடையாது.

இரவு வேறு. மழையும் விட்டபாடாக இல்லை.

சில நேரத்திற்கெல்லாம் மிகுந்த இட நெருக்கடி ஏற்பட்டது. மூவரும் யோசித்தனர் அதிகம் பேர் நின்று கொண்டு நம்மை நெருக்குவது போன்றதன் காரணம் என்ன? நம்மைத் தவிர வேறு யாரேனும் இருக்கக்கூடும் என நினைத்து, இரவு நேரமாகையால் விளக்கு ஏற்றி பார்க்கலாம் - ஆனால் விளக்கிற்கு எங்கே போவது என்றாய்ந்தனர்.

அப்பொழுது பொய்கை ஆழ்வார் :

இவ்வுலகத்தையே விளக்காகவும், கடல் நீரை நெய்யாகவும், சூரியனையே நெருப்பாகவும் ஏற்றுகிறார். - (அறியாமை எனும் இருள் விலக - ஞானமாகிய அறிவொளியிட்டு - பிறவிப் பெருங்கடல் தாண்ட - இவ்வுலக பந்தங்களிலிருந்து விலக) திருமாலின் திருப்பாதங்களுக்கு இவ்வடிகளை சமர்ப்பிக்கிறார்.

வையம் தகளியா வார்கடலே நெய்யாக
வெய்ய கதிரோன் விளக்காக - செய்ய
சுடர் ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை
இடர் ஆழி நீங்குகவே என்று.


இதுகண்ட பூதத்தாழ்வார் :

(இறைவன் மீதான) அன்பை விளக்காகவும், அவனையே சரணடைய வேண்டுமென்ற ஆவலையே நெய்யாகவும், இன்பம் அளிக்கும் சிந்தையையே திரியாகவுமிட்டு - தமிழ் பாசுரத்தால் - ஞான விளக்கேற்றுகிறார்.

அன்பே தகளியா ஆர்வமே நெய்யாக
இன்பு உருகு சிந்தை இடுதிரியா - நன்புருகி
ஞானச்சுடர் விளக்கேற்றினேன் நாரணர்க்கு
ஞானத் தமிழ் புரிந்த நான்


பேயாழ்வார், இவ்விருவர் விளக்கொளியால்,

பொன் போன்ற நிறத்தையொத்த தாயாராகிய இலக்குமி தேவியையும், அவளை வரித்திருந்தவனின் கார்மேகம் போன்ற நிறத்தையும், பரவசத்தையளிக்கும் சசாங்கம், சாரங்கம் எனும் சங்குசக்கரங்களை வரித்திருந்த தோள்களையும், கடல் நிறத்தை ஒத்தவனிடத்தில் (திருமால்) காண்கிறேன் என்கிறார்.

திருக்கண்டேன் பொன்மேனிகண்டேன், திகழும்
அருக்கண் அணிநிறமும் கண்டேன் - செருக்கிளரும்
பொன் ஆழி கண்டேன், புரிசங்கம் கைகண்டேன்
என்ஆழி வண்ணன்பால் இன்று

(அறியாமை இருள் விலக்கி - உலகப் பற்றற்று - ஞான அறிவு பெற்று - இறைவனையே சிந்திப்பதனால் - ஞானத்தால் இறைவனை அடையலாம்).

Points to be noted here :

பாசுரங்களின் பொருளுரை யதார்த்தமானதுதான். மிகச்சரியான கருத்துக்களுக்கோ, உட்கருத்துக்களுக்கோ வேறு நல்ல உரையை கண்டு கொள்ளவும்.

முதலாம் திருவந்தாதி: (அந்தம் + ஆதி )

"வையம் தகளியா" பாடலானது... "என்று" என முடிய அடுத்த பாடல் "என்று கடல் கடைந்தது..." என ஆரம்பிக்கிறது. இப்படியாக முதல் நூறு பாடல்களை பொய்கை ஆழ்வார் பாடுகிறார். இதன் நூறாவது பாடலின் கடைசி வார்த்தையானது ... "மனத்து வை" என முடிந்து "வையம் தகளியா"... என ஆரம்பமாக வகைசெய்கிறது.

இரண்டாம் திருவந்தாதி:

"அன்பே தகளியா" பாடலானது... "நான்" என முடிய அடுத்த பாடல் "ஞானத்தால்..." என ஆரம்பிக்கிறது. இப்படியாக இரண்டாம் நூறு பாடல்களை பூதத்தாழ்வார் பாடுகிறார். இதன் நூறாவது பாடலின் கடைசி வார்த்தையானது ... "யானுடைய அன்பு" என முடிந்து "அன்பே தகளியா"... என ஆரம்பமாக வகைசெய்கிறது.

மூன்றாம் திருவந்தாதி:

"திருக்கண்டேன்" பாடலானது... "இன்று" என முடிய அடுத்த பாடல் "இன்றே கழல் கண்டேன்..." என ஆரம்பிக்கிறது. இப்படியாக மூன்றாம் நூறு பாடல்களை பேயாழ்வார் பாடுகிறார். இதன் நூறாவது பாடலின் கடைசி வார்த்தையானது ... "பூ மேல் திரு" என முடிந்து ""திருக்கண்டேன்"... என ஆரம்பமாக வகைசெய்கிறது.

Evidences

இவர்கள் மூவருக்கும் மேற்குறிப்பிட்ட காதை நடைபெற்றதற்கான வரலாற்று சான்றுகள் இல்லை. ஆனால் இம்மூவரும் சந்தித்திருக்கக்கூடும்.

மூவரின் காலங்களுமே 700 A.D தான். கிட்டத்தட்ட இக்காலங்களை ஒட்டி வாழ்ந்த சைவக்குறவர்கள் அப்பர், ஞானசம்பந்தர்.

பல்லவர்கள் (இடை மற்றும் கடை), பிற்கால சோழர்கள் ஆட்சிக்காலங்களாகவும் இருந்திருக்கக்கூடும்.

எவரெனும் Histroy and literature நன்கு தெரிந்தவர்கள் எழுதலாம்.

Tuesday, June 29, 2010

இரட்டைப் புலவர்கள் - 1

தமிழ்ப் புலவர்களில் அதிகம் பேசப்படாதவர்களுள் "இரட்டை புலவர்"களும் அடங்குவர். இதில் ஒருவருக்கு கண்பார்வை கிடையாது. மற்றொருவருக்கு கால்கள் கிடையாது. இவர்களின் வெண்பாக்களில் முதல் இரு அடிகளை முதலாமவர் சொல்ல, ஈர்ரடிகளிரண்டையும் பின்னவர் முடிப்பார்.

கால்களற்றவர் வழி சொல்ல, பார்வையற்றவர் அவரை தோள்களில் தூக்கிகொண்டு செல்வார். ஏழ்மையில் வாடிய அவ்விருவருக்கும் உடுத்த துணி ஒன்று.மாற்று துணி ஒன்று தான். அவ்விரண்டுமே கந்தல் வேறு. ஒருமுறை அவ்விருவரும் மதுரையம்பதிக்கு விஜயம் செய்தனர்.

வைகையில் துணிகளை அலசி, நீராடி விட்டு, சொக்கரையும், மீனாட்சியையும் சந்திக்க உத்தேசப்பட்டு, ஆற்றில் இறங்கினர். பார்வையற்றவர் துணிகளைத் துவைக்க, கால்களற்றவர் கரைமேல் அமர்ந்து கொண்டிருந்தார்.

வைகையின் வெள்ள மிகுதியால், துவைக்கப்பட்டு கல்லின் மேல் வைக்கப்பட்டிருந்த வேட்டியானது நீரினால் அடித்துச்செல்லப்பட்டது. நடப்பதேதும் அறியாத பார்வையற்றவர் மற்றொரு துணியை துவைத்துக்கொண்டிருக்க, நீரினால் அடித்துச்செல்லப்பட்ட வேட்டியை தண்ணீரில் இறங்கி பிடிக்க முடியாத கால்களற்றவர் :

"அப்பிலே துவைத்து அடுத்தடுத்து அதைநீர்
தப்பினால் நம்மை யது - தப்பாதோ"


என வெண்பாவின் முதல் இரு அடிகளை சொன்னார்.

[பொருள் : திரும்ப திரும்ப அந்த கந்தல் துணியை அடித்து துவைத்தால் - (பாவம்! அந்த துணி விட்டா போதுண்டாசாமி-ன்னு) நம்மை விட்டு விலகிச்சென்றுவிடாதோ!]

கல்லின் மேல் வைக்கப்பட்டிருந்த வேட்டியானது நீரினால் அடித்துச்செல்லப்பட்டது என்று பார்வையற்றவருக்கு அப்போதுதான் புரிந்தது . என்ன செய்வது? நீரில் நீந்திச்சென்று பிடிக்கமுடியாத நிலை. இப்போது வெண்பாவை எப்படி முடிக்கிறார் பாருங்கள்:

"இக்கலிங்கம் போனாலென்ன எகலிங்க மாமதுரை
சொக்கலிங்கம் உண்டே துணை".

[பொருள் : இந்த துணி (கலிங்கம் -துணி) போனா போகட்டும் நமக்கு துணையாத்தான் சொக்கர் இருக்காரே!!)

சொக்கர் மேல் என்னே! பற்றற்ற பக்தி அவ்விருவருக்கும்.

என்னே! தமிழ். என்னே! பக்தி.

அய்யன்மீர்! தமிழுடனே பக்தியும் இணையும் பொழுதல்லவோ பரவசநிலை?

Tuesday, January 26, 2010

புல்லறிவாளரைப் போற்றாதீர்!

செல்வம் கருதிச்
சிலர்பலர் வாழ்வு எனும்
புல்லறிவாளரைப்
போற்றிப் புலராமல்,
இல்லம் கருதி
இறைவனை ஏத்துமின்
வில்லி இலக்கு எய்த
விற்குறி ஆமே.


சிலருக்கும் பலருக்கும் செல்வ வாழ்வு தருகிறோம் என்று
சொல்லிச் செல்வோரின் அழிகின்ற செல்வத்தைக் கருதி
வாழ்த்தி வாடாதீர்!

வில்வீரன் செலுத்தும் அம்பானது இலக்கைத் தவறாது அடைவது போல,
வீடு, பேற்றை அளிக்கும் இறைவனை வணங்கி வாழ்த்தினால்,
உங்களது வறுமையைத் தவறாது நீக்கி இன்பம் தருவான்.


-அறம் செய்யான் திறம், திருமந்திரம் (269)

Thursday, January 14, 2010

நாட்டுப் பாடல் - 1

கண்டகண்ட கோவிலெல்லாம்
கையெடுத்துக் கும்பிடுவார்
காணாத கோவிலுக்குக்
காணிக்கை அனுப்பிவைத்தார்
இலையிலே சாதமுண்டால்
என்னதவம் என்றுசொல்லித்
தரையை அவர் மெழுகிச்
சாதங்கள் உண்டார்கள்

பாலடைக்குப் பால்கொடுப்பார்
பசித்தார் முகம்பார்ப்பார்
தவித்து வந்த பேர்களுக்குத்
தண்ணீர் கொடுப்பார்கள்
சாலைகள் போட்டு வைத்தார்
சத்திரங்கள் கட்டிவைத்தார்
என்ன தவம் பண்ணினாலும்
எதனாலும் பிள்ளை இல்லை!

-நாட்டுப் பாடல்

Sunday, December 27, 2009

அல்லாவின் அருள்!

கல்லாதவ ராயினும்,
உண்மை சொல்லதவராயினும்,
பொல்லாதவ ராயினும்,
தவமில் லாதவ ராயினும்,
நல்லாருரை நீதியின்படி
நில்லாதவ ராயினும்,
எல்லாரும் வந்தேத்து மளவில்
யமபயங் கெடச் செய்பவன்,
அல்லா, அல்லா, அல்லா!

-மகாகவி பாரதி

Wednesday, December 23, 2009

பிறகு பார்க்கலாம்!

எத்துணை யானும்,
இயைந்த அளவினால்,
சிற்றறம் செய்தார் தலைப்படுவர்;
மற்றைப்
பெருஞ்செல்வம் எய்தியக்கால்,
'பின்னறிதும்!' என்பார்
அழித்தார்,
பழிகடலுத் துள்.

-துன்ப இயல், நாலடியார்(272)


தம்மால் இயன்ற அளவு எவ்வளவேயாயினும்,
சிறிய தருமங்களைச் செய்து வருபவர்கள்
எக்காலத்திலும் மேன்மை நிலையில் இருப்பார்கள்;

பெருஞ்செல்வம் இருந்தும் தருமம் செய்யாது,
'பிறகு பார்க்கலாம்' என்றிருப்பவர்கள்,
'உலக நிந்தனை'க் கடலிலே சிக்கி அழிந்து போவர்.

தலைப்படல் - மேன்மைப்படுதல்
பழி கடலம் - கடல் அளவான பழிச்சொற்களின் மிகுதி